கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர்

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர்
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர்

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு - நவ., 28-ல் ஆய்வு செய்கிறார் பிரதமர்

புதுடில்லி: புனேவின் சீரம் இந்தியா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்து வரும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை நவ., 28-ல் பிரதமர் பார்வையிடுகிறார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனகா 'கோவிஷீல்டு' எனும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இத்தடுப்பூசியை தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கில் தடுப்பூசிகளை உருவாக்கும் முன்னணி நிறுவனமாக சீரம் இந்தியா நிறுவனம் திகழ்கிறது. தற்போது உலகம் முழுவதும் கோவிஷீல்டின் 3-ம் கட்ட தடுப்பூசி சோதனை நடந்து வருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இச்சோதனை நடந்தது.

மூன்றாம் கட்ட சோதனையின் இடைக்கால முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. அவை 70% ஆற்றல் மிக்கவை என அதில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியை பிரித்தளிக்காமல் ஒரே முறையாக செலுத்தும் போது 90% வரை பயனளிப்பதாக கூறுகின்றன. 131 கொரோனா நோயாளிகளிடம் நடந்த இறுதிகட்ட பரிசோதனையின் தரவுகளை கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. தடுப்பூசி பெற்ற எவருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உண்டாகவில்லை, நோய் தீவிரமடையவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் சனியன்று புனேவிலுள்ள சீரம் இந்தியா நிறுவன ஆய்வகத்திற்கு செல்கிறார். இத்தகவலை புனே மாவட்ட அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். தடுப்பூசி தயாரிப்புகள், அவற்றின் பாதுகாப்பு, பக்கவிளைவுகள் போன்றவற்றை கேட்டறிவார். இந்தியாவிற்கு குறைந்த விலையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் தடுப்பூசி வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிப்பார் என்கின்றனர்.