நாட்டின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா தொடக்க விழா: 11 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

நாட்டின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா தொடக்க விழா: 11 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவில் முதலாவதாக பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) தமிழகத்தன் விருதுநகர் அமைய உள்ளது. இதற்கான தொடக்க விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும் என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 1231 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 6315 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.

இந்த ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவானது 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் மூலம் உருவாக்கப்படும். இப்பூங்கா முழு அளவில் செயல்படும்போது சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.