ஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை
புதுடெல்லி: போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று மத்திய மோட்டார் வாகன சட்டம்-1989-ன் 8-வது விதிமுறை கூறுகிறது. இந்த விதிமுறை, கிராமப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வி அறிவில்லாத, ஆனால் திறமையான ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.
அவர்கள் முறையான கல்வி கற்காவிட்டாலும், எழுதப்படிக்க தெரிந்தவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர்.
சமீபத்தில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரியானா மாநிலம் மேவாத் பிராந்தியத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓட்டுனர்களுக்கு இந்த கல்வித்தகுதி நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியது. அவர்களுக்கு ஓட்டுனர் தொழிலே வாழ்வாதாரமாக இருப்பதாக தெரிவித்தது.
இதை பரிசீலித்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகனம் ஓட்டுவதற்கு கல்வித்தகுதியை விட திறமையே முக்கியம் என்று உணர்ந்தது. எனவே, குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய முடிவு எடுத்தது. இதை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் 8-வது விதிமுறையில் திருத்தம் கொண்டு வருவதற்கான நடைமுறையை தொடங்கி உள்ளது. விரைவில், இதுதொடர்பான வரைவு அறிவிப்பாணையை வெளியிட உள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதியை ரத்து செய்வதற்கான மோட்டார் வாகன திருத்த மசோதா, ஏற்கனவே முந்தைய மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள திறமையான இளைஞர்களுக்கு ஓட்டுனர் வேலை கிடைக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. போக்குவரத்து துறையிலும், தளவாடங்கள் துறையிலும் 22 லட்சம் ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இம்முடிவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயத்தில், ஓட்டுனர்களின் திறமையையும், பயிற்சியையும் நன்றாக பரிசோதித்த பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. அப்போதுதான், சாலை பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று கருதுகிறது.
சாலையில் உள்ள போக்குவரத்து குறியீடுகளின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளும் வகையில், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் கற்றுத்தர வேண்டும் என்றும் அமைச்சகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வாகனத்தை ஓட்டுவதற்கான அனைத்து அம்சங்களையும் கற்றுத்தரும் வகையில் உயர்ந்த தரத்துடன் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.