மைசூரு தசரா விழாவில் பங்கேற்க முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நேரில் அழைப்பு
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நேரில் அழைப்பு
பெங்களூரு,
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. மைசூருவில் உள்ள சாமுண்டி மலையில் சிறப்பு பூஜையுடன் இந்த விழா தொடங்கப்பட உள்ளது. இந்த விழாவை பெங்களூரு ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில் மைசூரு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் தலைமையிலான குழுவினர் பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது மைசூரு தசரா விழாவில் கலந்து கொள்ளுமாறு கூறி அழைப்பிதழை வழங்கினர்.
அதைத் தொடர்ந்து ஜெயதேவா அரசு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத்தை அந்த குழுவினர் நேரில் சந்தித்து தசரா விழாவை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர். கொரோனோ நெருக்கடி காரணமாக இந்த முறை தசரா விழாவை மிக எளிமையாக கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மைசூரு சாமுண்டி மலையில் தொடக்க விழாவும், அதைத்தொடர்ந்து அரண்மனையில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு
அந்த கலாசார நிகழ்ச்சிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிகளை ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. இந்த கலாசார நிகழ்ச்சிகளில் உள்ளூர் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
தசரா விழாவையொட்டி மைசூருவில் மின்விளக்கு அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரம் இரவு நேரத்தில் ஒளிரவிடப்படும். தசரா விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் ஜம்பு சவாரி இந்த முறை அரண்மனை வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் என்று அரசு கூறியுள்ளது.