விதிகளை முறையாக பின்பற்றாமல் மாநகராட்சி அலட்சியம்: கொசு தொல்லை அதிகரிப்பால் சென்னை மக்கள் கடும் அவதி
விதிகளை முறையாகப் பின்பற்றாமல் மாநகராட்சி அலட்சியம் காட்டுவதால் சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், கொசுக்கடியால் அவதிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்கள் உள்ளன. இவற்றிலும், பெரும்பாலான மழைநீர் வடிகால்களில் 365 நாட்களும் கழிவுநீர் ஓடுவதால் கொசு உற்பத்தி ஆதாரங்களாக மாறியுள்ளன.
குறிப்பாக, கடித்து தொல்லை கொடுக்கும் கியூலெக்ஸ் கொசுக்களே அதிகமாக உள்ளன. இந்தவகை கொசுக்கள், கடந்த ஒரு மாதத்தில் அதிகமாக இனப்பெருக்கம் ஆகியுள்ளன. இதனால் வீடுகளுக்குக் கொசு வலைகளைப் பொருத்தியும் பலன் இல்லை எனப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி சார்பில் முதிர் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 3,312 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், வாரந்தோறும் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்வதாகவும், 216 இயந்திரங்களைக் கொண்டு புகை பரப்பி முதிர் கொசுக்களை அழிப்பதாகவும், நீர் வழித்தடங்களில் 844 கை மற்றும் விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்தி கொசுக்கொல்லி தெளிப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதவிர, தற்போது ட்ரோன்களை கொண்டு கொசுக் கொல்லி தெளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த பணிகளை அலட்சியத்துடன், முறையற்ற வகையில் மேற்கொள்வதால் கொசுக்கள் அழியாமல் அதிகரித்திருப்பதாக பூச்சியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
முதலில் கொசுப்புழு உற்பத்தி ஆதாரங்களை கண்டறிந்து அழிக்க முக்கியத்துவம் அளிப்பதில்லை. வீடு வீடாகச் செல்வோர் முறையாக கொசு உற்பத்தி ஆதாரங்களை கண்டுபிடிப்பதே இல்லை. கடைசி வாய்ப்பாக மேற்கொள்ள வேண்டிய புகைபரப்பி முதிர் கொசுக்களை அழிக்கும் பணியே பிரதான பணியாக மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாகச் சென்னையில் பலத்த காற்று வீசிய நிலையில், புகை பரப்பி வீணடிக்கப்பட்டது. நீர்வழித் தடங்களில் கண்ணில்படும் வகையில் குழாய்கள் அமைத்து கழிவுநீர் விடுவதைத் தடுக்கவில்லை. மாநகராட்சி கொசு புழுக்கொல்லி மருந்துகளை ட்ரோன் மூலம் தெளித்தாலும், ஓரிரு மணி நேரங்களில் கழிவுநீரால் அடித்துச் செல்லப்படுகிறது.
உயிரியல் முறையில் கொசுப்புழுக்களை உணவாக உண்ணும் டிப்லோனிகஸ் இன்டிகஸ் போன்ற பூச்சி இனங்களைக் கழிவுநீர் நிலைகளில் வளர்க்கும் திட்டம் இல்லை. வாரந் தோறும் நீர்வழித் தடங்களில் கொசுப் புழுக்களின் அடர்த்தியைப் பரிசோதித்து, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை வகுத்திருந்தால், இந்த அளவு கொசுக்கள் பெருக்கம் அடைந்திருக்காது. அனைத்து வகைதடுப்பு நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள மாநகராட்சி தவறிவிட்டது. இதன் காரணமாகவே மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மாநகராட்சியை வழிநடத்தும் அனுபவம் வாய்ந்தவர்கள், மாநில பொது சுகாதாரத் துறையில் இல்லை. கொசுக்களைக் கட்டுப்படுத்த உடனடியாக தீவிர கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை, உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத்திடம் கேட்டபோது, ‘‘இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.