சசிகலா விடுதலை எப்போது சிறைத்துறை ஆலோசனை
சசிகலா விடுதலை எப்போது:சிறைத்துறை ஆலோசனை
சென்னை : சிறையில் இருந்து சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் ஜனவரியில் தான் விடுதலையாக வாய்ப்புள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் உள்ளனர். மூவரின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது.
இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு சிறையில் வழங்கப்படும் 129 சலுகை நாட்களை கழித்தால் இம்மாதம் விடுதலையாகலாம் என தகவல் வெளியானது.சசிகலா செலுத்த வேண்டிய அபராதத் தொகை 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய்க்கு 'டிடி' எடுத்து பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தினார்.அபராதத் தொகை செலுத்தியதற்கான ரசீது பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை கண்காணிப்பாளரிடம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்று பேர் விடுதலையாகி உள்ளனர். எனவே சசிகலா எந்த நேரத்திலும் விடுதலையாகலாம் என்ற நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.இது குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் கேட்டபோது 'சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை செலுத்தி உள்ளனர். எனினும் அவரது விடுதலைக்கான நடைமுறை ஜனவரியில் தான் துவக்கப்படும்' என்றனர்.
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் கூறியதாவது:சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்தப்பட்டதற்கான ரசீதை சிறைத் துறையில் வழங்கி உள்ளோம். மேலும் சசிகலா சிறையில் இருந்த நாட்களில் சலுகை விடுமுறை 129 நாட்கள் உள்ளன.அவற்றை கழித்து உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என சிறை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர்களும் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
இனி சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பதை சிறைத்துறை தான் அறிவிக்க வேண்டும். ஜனவரியில் விடுதலையாவார் என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிலர் கேட்டதற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் சட்டவிதிகளின்படி அவருக்கு சலுகை விடுமுறை நாட்களை கழித்தால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்