தாம்பரம் ரயில் நிலையத்தை தனியாருக்கு தாரைவாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தை தனியாருக்கு தாரைவாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு

தாம்பரம் ரயில் நிலையத்தை முழுமையாக தனியாருக்கு தாரைவாக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் ரூ.22,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் 100 நகரங்களில் 150 தனியார் ரயில்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ள ரயில்வே அமைச்சகம், தமிழகத்தில் 11 தனியார் ரயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளது. அதாவது, சென்னை-பன்வேல் (மும்பை) வாரம் இருமுறை, சென்னை-ஓக்லா (டெல்லி) தினசரி, சென்னை-ஹவுரா தினசரி, தாம்பரம்-மதுரை தினசரி, சென்னை-சர்லாபள்ளி (செகந்திராபாத்) தினசரி, தாம்பரம் - பையப்பனஹள்ளி (பெங்களூரு)  தினசரி, சென்னை-கோவை தினசரி, நெல்லை-தாம்பரம் தினசரி, தாம்பரம்-திருச்சி, சென்னை-(ராஜஸ்தான்) பகத் கி கோத்தி, கன்னியாகுமரி-தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதில், தமிழகத்தில் தனியார் ரயில்களுக்கான முனையமாக சென்னையை அடுத்துள்ள தாம்பரமாக ரயில்வே நிலையத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மதுரை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் தனியார் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேபோல், தாம்பரம்-திருச்சி, கன்னியாகுமரி-தாம்பரம் தடத்திலும் தனியார் ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் ரயில்கள் ஏற்கனவே தாம்பரம் வழியாக செல்லும். ஆகவே, தனியார் ரயில்களுக்கான முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் மாற்றப்படவுள்ளது. ரயில்வேயை தனியார்மையாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஏற்கனவே நாடு முழுவதும் எதிர்ப்புகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.