முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு:டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம்
தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதி சென்னையில் உள்ள 3 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களைச் சூட்டினார். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்' எனவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 'புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்' எனவும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 'புரட்சி தலைவி டாக்டர்.ஜெயலலிதா மெட்ரோ ரயில் நிலையம்' எனவும் பெயர் சூட்டப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு காரணமாக இருந்த கருணாநிதியின் முயற்சியை வரலாற்றில் இருந்து மறைக்கவும், அரசியல் நோக்கத்துடனும் மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு டாக்டர். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் சூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.