இனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை

இனிப்பு மிகுந்த பானங்கள் விளம்பரத்துக்கு தடை

உலக அளவில், 42 கோடி மக்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, 2045ல், 63 கோடியாக உயரும் என, சர்வதேச நீரிழிவு சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில் மட்டும், 13.7 சதவீதம் பேர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

இதை கட்டுப்படுத்த, சிங்கப்பூர் அரசு, அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதிக சர்க்கரை அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களை, பத்திரிகை, இணையதளம், வானொலி மற்றும் ‘டிவி’க்களில் விளம்பரம் செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்களால் கவரப்பட்டு, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், பானங்களை, மக்கள் பருகுவதை தவிர்க்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது வெறும் ஆரம்பம் தான் என்றும், விரைவில், அதிக சர்க்கரை கொண்ட உணவு பொருட்களுக்கு கூடுதல் வரி அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்புள்ள தாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.