கைதிகள் ஊர் திரும்ப இந்திய தொழிலதிபர் உதவி
துபாய்: துபாய் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகளை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஜொகிந்தர் சிங் சலாரியா, தனது சொந்த செலவில் அனுப்பி வைத்தார்.விடுவிக்கப்பட்ட கைதிகள் பாகிஸ்தான், வங்கதேசம், உகாண்டா, ஆப்கன், நைஜீரியா, சீனா மற்றும் எத்தியோப்பியாவை சேர்ந்தவர்கள். சிறு குற்றங்களை செய்ததற்காக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜொகிந்தர் சிங் சலாரி யா. இவர் கடந்த 1993 முதல் துபாயில் வசித்து வருகிறார். பெகல் சர்வதேச போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், பெகல் டிரஸ்ட் நிர்வாகியாகவும் உள்ளார். இவர், கைதிகள் விடுதலை செய்யப்பட்டதும், அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கு மட்டும் பயன்படும் டிக்கெட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
இது குறித்து ஜொகிந்தர் சிங் கூறுகையில், விடுதலையானவர்கள், சொந்த ஊருக்கு செல்வதற்கு விமான டிக்கெட் வாங்க கூட வசதியில்லாதவர்கள். துபாய் போலீசார், டிரஸ்ட், ரத்து கொடையாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார்கள். தற்போது, வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 13 பேர், சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவி செய்கிறோம். இதன் மூலம் அவர்கள் விமானத்தில் பயணித்து குடும்பத்தினரை சந்திக்கலாம்.
விடுதலையான கைதிகளின் பட்டியலை போலீசார் எங்களுக்கு கொடுத்தனர். அவர்களில் பெரும்பாலானோர், பணிபுரியும் இடத்தில், உயரதிகாரிகளுடன் மோதலில் ஈடுப்பட்டவர்கள். விசா காலம் முடிந்து கூடுதல் காலம் தங்கியவர்கள். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் தயாராக இல்லை என்றார்.