பணத்தை விட்டுவிட்டு வெங்காயத்தை மட்டும் திருடிச்சென்ற மர்மநபர்கள்...!
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் நிலையில் வெங்காயத்தின் விலை இருப்பதால் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமைக்கும் பெண்களும் வெங்காயத்தை மிக சிறிய அளவிலேயே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் சுதஹாதா பகுதியில் காய்கறிக்கடையில் வெங்காயத்தை திருடிச்சென்றுள்ளனர் மர்ம நபர்கள்.
வழக்கம்போல அதிகாலை கடையை திறந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் சிதறி இருப்பதைப்பார்த்துள்ளார் கடை உரிமையாளர் அக்ஷய் தாஸ். பின்னர், சோதனை செய்து பார்த்ததில் கடையில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளில் சில மூட்டைகள் காணாமல் போயிருந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த அக்ஷய் தாஸ், பணம் ஏதும் திருடுபோயிருக்கிறதா என்று பார்த்துள்ளார். ஆனால், பணப்பெட்டியில் இருந்து ஒற்றை பைசாவை கூட எடுக்காத மர்மநபர்கள், சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு வெங்காயம் மற்றும் சிறிது இஞ்சி, பூண்டை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. தங்கம், வைரம் போன்றவைகள் திருடப்படுவது அவ்வப்போது நிகழும் சம்பவம். ஆனால், விலை அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் வெங்காயம் திருடப்படுவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.