ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது

ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது

சென்னை: தமிழக அரசிதழில் வெளியான கவர்னரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்பதால், அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. ஆவடி மாநகராட்சி அவசர சட்டம் 2019 உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆவடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் மட்டும் (48 வார்டுகள்) இந்த அவசர சட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

எனவே ஆவடி மாநகராட்சிக்கு ஒரு மேயர் நியமிக்கப்பட வேண்டும். மாநகராட்சி கவுன்சில், நிலைக்குழு, வார்டு கமிட்டி, ஆணையர் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கான தேர்தல்களை நடத்தும்போது ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டின்படி பெண்கள், எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அங்கு மக்கள் தொகை பெருகி வருவதாலும், ஆண்டு வருமானம் உயர்வதோடு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவாக இருப்பதாலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த முடிவின் அடிப்படையில் இதற்கான அவசர சட்டம் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிருபர்களுக்கு, ஆவடி எம்.எல்.ஏ.யும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான பாண்டியராஜன் அளித்த பேட்டி வருமாறு:-

ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது, டைடல் பார்க் அமைப்பது, பருத்திப்பேட்டையில் இயற்கை பூங்கா அமைப்பது பற்றி 2016-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமாக குறிப்பிட்டு இருந்தோம். அவை மூன்றுமே தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இயற்கை பூங்காவை முதல்-அமைச்சர் 19-ந் தேதி (இன்று) திறந்து வைக்க உள்ளார். டைடல் பார்க்கிற்கும் நிலம் எடுக்கப்பட்டு அமைக்கப்பட்டு வருகிறது.

ஆவடி நகராட்சி 5.2 லட்சம் மக்கள் தொகை கொண்டதாகும். அங்கு 48 வார்டுகள் உள்ளன. அவை தரம் உயர்த்தப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆவடியின் அருகில் உள்ள மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகள் இதில் இதுவரை இணைக்கப்படவில்லை.

மாநகராட்சியாக தரம் உயருவதன் மூலம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், வளர்ச்சி திட்டங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 2 கோடி ரூபாய் செலவில் ரெயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமமாக இருந்த ஆவடி பல ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சியாக உயர்ந்துள்ளது. அங்கு மத்திய அரசின் 8 நிறுவனங்கள் உள்ளன.

டி.ஐ. சைக்கிள் உள்பட பல்வேறு தனியார் கம்பெனிகள், நிறுவனங்கள் உள்ளன. 15 ஏரிகள் இருக்கின்றன. சி.டி.எச். சாலை விரிவாக்கம், பாலங் களை அமைப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ளன. பின்னர் நாகர்கோவில், சிவகாசி, ஓசூர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டன. அவற்றில் சிவகாசி தவிர மற்ற 14 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. வரிசையில் ஆவடி 15-வது மாநகராட்சியாக இருந்தாலும், மக்கள் தொகையில் 7-ம் இடம் வகிக்கிறது.

கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வு விரிவான முறையில் நடைபெற்று வருகிறது.

அங்கு அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த அருங்காட்சியகமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.