தீபாவளி நெருங்கும் நேரத்தில்.. கிளாம்பாக்கம் செல்ல காத்திருந்தவர்களுக்கு.. வந்த ஷாக் செய்தி.. போச்சே

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்துடன் (KCBT) இணைக்கும் ஆகாய நடைபாதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே குறிப்பிட்ட சில மீட்டருக்கு பாலம் கட்ட முடியாத காரணத்தால் திறப்பு விழா தள்ளி போய் உள்ளது. இதனால் பண்டிகைக் காலங்களில் பயணிகள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்..
சென்னையின் மையத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் செல்லும் பயணிகள், ஆட்டோ மற்றும் கார்களில் ரூ. 300 முதல் ரூ. 500 வரை செலவழித்து, வெளியூர் மற்றும் SETC பேருந்துகளில் பயணிக்கின்றனர். மேலும், பாதசாரி மேம்பாலம் இல்லாததால், நூற்றுக்கணக்கான பயணிகள் GST சாலையை நடந்து கடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வருகின்றனர், இதனால் உயிரிழப்பு அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
கிளாம்பாக்கம் மேம்பால பணிகள்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12 மாத காலக்கெடுவுடன் தொடங்கிய நிறுத்த நிலையத்தின் கட்டுமானப் பணிகள், CMDA மற்றும் தெற்கு ரயில்வேயின் தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து தடங்கல்களும் அகற்றப்பட்டுவிட்டன என்று அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கூறி வந்தாலும், ரயில் நிலையத்தின் பணிகள் மிகக் குறைந்த அளவே நடந்து உள்ளன.
GST சாலைக்கு மேலே 450 மீட்டர் நீளமுள்ள ஆகாய நடைபாதை, ரயில் நிலையத்தை KCBT உடன் இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டது, ஆனால் அதுவும் முன்னேற்றம் காணாமல், பேருந்து நிலையத்தின் முன் பாதியிலேயே நிற்கிறது. மாநில அரசு ரயில் நிலைய மேம்பாட்டிற்காக ரயில்வேக்கு ரூ. 20 கோடி வழங்கியுள்ளது.
பணிகள் நடக்கவில்லை
ஆகாய நடைபாதை தாமதத்திற்கு CMDA தான் காரணம் என்று தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது, இது ரயில் நிலையப் பணிகளையும் முடக்கியுள்ளது. ஒரு நடைபாதை மட்டும் கூரையுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளமுள்ள தீவு நடைபாதையின் பணிகள் நடைபெற்று வருகின்றன, மண் நிரப்பும் பணி முடிந்துவிட்டது. ஊரப்பாக்கம் முனையில், கூரை அமைப்பதற்கான அஸ்திவாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று சென்னை ரயில்வே கோட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கீழ் நடைமேடையில் (தாம்பரம்-செங்கல்பட்டு பக்கம்) பாதசாரி மேம்பாலத்திற்கான அஸ்திவாரத்தை CMDA அமைத்துள்ளதாகவும், தீவு நடைமேடையில் முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன. CMDA பாதசாரி மேம்பாலத்தை முடித்ததும், மீதமுள்ள நடைபாதை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
CMDA அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, MTC பேருந்து நிறுத்தத்தில் பாதசாரி மேம்பாலத்திற்கான தூண்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. GST சாலைக்கு மேலே உள்ள ஆகாய நடைபாதை பணிகள் பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆயுத பூஜை முடிந்த பிறகு ஒரு பகுதியையும், தீபாவளிக்குப் பிறகு மற்ற பகுதியையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பாதசாரி மேம்பாலம் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டு ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
வார இறுதி நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் KCBT சுமார் 2 லட்சம் பயணிகளைக் கையாள்கிறது. ஆனால் MTC பேருந்துகள் தவிர, டெல்டா, வட மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு பேருந்து நிலையத்தை அணுக வேறு பொதுப் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அந்த சமயத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால்.. விடுமுறை நாட்களில் பணிகளை மேற்கொள்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.