எஸ்.பி.பி. நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர்

 எஸ்.பி.பி. நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர்

எஸ்.பி.பி. நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர்
 

கரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.க்கு, நுரையீரலில் நோய்த் தொற்று தீவிரமடைந்தது. அதனால் அவரது இரு நுரையீரல்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அவரது நுரையீரல்களின் செயல்பாடுகள் படிப்படியாக மேம்படத் தொடங்கின. இந்நிலையில், புதன்கிழமை மாலை அவரது உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. 
 

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை செய்திக் குறிப்பு:

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.-க்கு உயிா் காக்கும் சாதனங்களின் உதவியுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவக் குழுவினரின் தொடா் கண்காணிப்பில் அவா் வைக்கப்பட்டுள்ளாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உயிா் காக்கும் மருத்துவ சாதனங்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, திடீரென உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து மருத்துவக் குழுவினா் அவருக்குத் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். 

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு இன்று வருகை தந்துள்ளார்கள். எஸ்.பி.பி. மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள். நேற்றிரவு நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனைக்கு வந்தார். இதையடுத்து இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனைக்கு இன்று வருகை தந்தார். 

எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்த பாரதிராஜா, செய்தியாளர்களிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்ணீருடன் பேசியதாவது:

சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. எஸ்.பி.பி. என்னுடைய 50 வருட கால நண்பன். என்னால் இந்தத் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளத் தெரியவில்லை. எல்லோரும் பிரார்த்தனை செய்தோம், எழுந்து வருவார் என. நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. ஆனால் இன்னும் சிறிய நம்பிக்கை உள்ளது. அவரைப் போன்ற ஒரு மனிதனை நான் பார்த்ததில்லை. இருவரும் ஒருவருக்கொருவர் வாடா போடா என அழைத்துக்கொள்வோம். வருத்தத்தில் என்னால் பேச முடியவில்லை என்றார்.