சென்னை கல்லூரி மாணவனுக்கு ஆயுள் தண்டனை ரத்து

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த ராஜ்குமார், பார்த்திபன் ஆகிய இரண்டு மாணவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2008, செப்டம்பர் 4 ம் தேதி ராஜ்குமார் தனது நண்பர்களுடன் சென்று பார்த்திபனை வகுப்பறையில் தாக்கினார். இதில் பார்த்திபன் காயமடைந்தார்.
இதனையடுத்து மறுநாள் ராஜ்குமாரின் வகுப்பிற்கு சென்ற பார்த்திபன், அவருடன் தகாறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பார்த்திபன் அருகில் கிடந்த கட்டையால் ராஜ்குமரை தாக்கினார், இதனால் பலத்த காயமடைந்த ராஜ்குமார் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2016-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, அனிதா சுமனந் அடங்கிய அமர்வு, மரணமடைந்த ராஜ்குமரை கொல்ல வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பார்த்திபன் செயல்படவில்லை.
கோபத்தில் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கியதில் மரணமடைத்துள்ளார். எனவே கொலை குற்றச்சாட்டின் கீழ் பார்த்திபனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் உள்நோக்கமின்றி மரணம் விளைவித்த பிரிவின் கீழ், பார்த்திபனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.
மேலும் இந்த அபாரத்தொகையை பலியான மாணவனின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும், பார்த்திபன் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கழித்து கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.