ராகுல் காந்தியை லேசர் துப்பாக்கி மூலம் கொலை செய்ய முயற்சி!

ராகுல் காந்தியை லேசர் துப்பாக்கி மூலம் கொலை செய்ய முயற்சி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்தி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார், அப்போது ராகுல் காந்தியை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாற்றியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன.

அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.

ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.

7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வி‌ஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.