தமிழகத்திற்கு காவேரி நீர் ஏன் தரப்பட்டது?: சித்தராமையா விளக்கம்

தமிழகத்திற்கு காவேரி நீர் ஏன் தரப்பட்டது?: சித்தராமையா விளக்கம்
Siddaramaiah explains Why Kaveri water is given to Tamil Nadu

பெங்களூரு: கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 30-ந் தேதி முதல் தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் ஏன் திறக்கப்பட்டு உள்ளது? என்பது குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா விளக்கம் அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

"கர்நாடகத்தில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது. ஆயினும் இன்னும் அணைகள் நிரம்பவில்லை. இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன் பிறகு செயற்கை மழை பெய்விக்கப்படும். இதற்கான டெண்டர் விடும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர்விட வேண்டும் என்ற நோக்கத்தில் காவிரி நீரை திறந்துவிடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு கொஞ்சம் தண்ணீர் திறந்து விட்டுள்ளோம்.

நடுவர்மன்ற உத்தரவுப்படி நாம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். தண்ணீர் திறக்காவிட்டால், தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும். நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. கடந்த ஆண்டு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அப்போது நம்மிடம் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீரை திறக்கவில்லை.

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை மத்திய அரசின் நீர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவே மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு எப்போதும் உண்மையை ஒப்புக்கொள்வது இல்லை. இந்த அணை கட்ட எந்த குறுக்கீடும் இல்லை. இதற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை. மத்திய நீர் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Siddaramaiah explains Why Kaveri water is given to Tamil Nadu