அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்: உச்சநீதிமன்றம்

அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.

அந்த விவகாரத்தை தனியாக விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் கருவிழி உள்ளிட்டவற்றை பகிர்வது தனிநபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். அதன் அடிப்படையில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு செய்யலாம் என்றும் 9 நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

பின்னர் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

வாரம் 3 நாள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது. கடந்த மே மாதம் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் நீதிபதி ஏ.கே.சிக்ரி கருத்தில் உடன்பாடு 

ஆதார் அடையாள அட்டை செல்லும் என அரசியல் சாசன அமர்வில் 5ல் 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்து உள்ளனர் அதன் படி:-

1. இந்தியாவில் ஆதார் விவகாரம் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்டது. எந்த வகையிலும் ஆதார் கார்டை போலியாக தயாரிக்க முடியாது.

2. ஆதாருக்காக குறைந்த பட்ச அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே பெறப்படுகிறது.

3. ஆதார் திட்டமும், சட்டமும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டும் தான் பிரச்சனை.

4. அரசின் நலத்திட்டங்களின் பலன்களை பெறவும், மானியம் பெறவும் ஆதார் அவசியமாகிறது என்ற மத்திய அரசின் கருத்து முக்கியமானது. சமூக நல திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும் என்ற மத்திய அரசின் எண்ணமும் குறிப்பிடத்தக்கது.

5. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றதல்ல. ஆதார் சிறந்ததாக இருப்பதைவிட தனித்துவமானது என்பதே நல்லது. தனித்துவ அடையாளம் என்பது எளிய மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும்

6. ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட தகவல்கள் கசியாமல் பாதுகாத்திட வேண்டும்.

7. தனிநபர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். தனிநபர் பாதுகாப்பை கவனமுடன் கையாள வேண்டும்.

8. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது, ஆதார் கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம்.

9. ஆதார் தகவல்களை கசியவிடக் கூடாது.

10. ஆதாருக்கான காரணம் காட்டி தனி நபர்களின் உரிமை மறுக்கப்படக்கூடாது.

11. ஆதாரில் கையெழுத்து முதல் கைரேகை வரை முக்கியமானது. பாதுகாக்கப்பட வேண்டும். கையெழுத்தை கூட மாற்றலாம். கைரேகையை மாற்ற முடியாது.

12. ஆதாருக்காக பெறப்படும் தகவல்கள் குறைவு. அதனால் கிடைக்கும் பயன்கள் அதிகம்.

13. தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும்.

14. சி.பி.எஸ்.இ., நீட் தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கக் கூடாது.

15. பள்ளியில் குழந்தைகள் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம் இல்லை. ஆதாரை காரணம் காட்டி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க மறுக்க கூடாது. ஆதாருக்காக கல்வி மற்றும் இதர சலுகைகளை 
மறுக்க கூடாது.

16. அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும்.

17. வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கி கணக்குகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

18 மொபைல் எண்களுக்கும் சிம் கார்டு பெறவும் ஆதார் கட்டாயம் இல்லை.

19. வருமானவரி கணக்கு தொடர்பான பான் எண்ணுக்கு ஆதார் கட்டாயம் ஆகும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.